Sunday 5 February 2012

தந்தை



என் துன்பங்களை
உறிஞ்சிக் கொண்டு
இன்பத்தை மட்டும்
என் மேல் உதறிவிடும்
அதிசய அன்னம் நீ !

மார்கழி மழை நாள்,
என் பிள்ளைப்பருவம்,
நம் மிதிவண்டிப் பயணம்,
என் ஆர்வம் கலந்த
அறியாமைக் கேள்விகள்,
அந்த ஒரு நாள் வாழ்க்கை போதும்
என் யுகம் தீர்ந்திடலாம்!

நேசிப்பதை,கோபிப்பதை,கண்டிப்பதைத்
தவிர என்னதான் தெரியும் என் தந்தைக்கு?
ஆனால் அதற்குள்
அழகாய் ஒளிந்திருக்கும்
என் மீதான அதீத அக்கறை!

என் விரலைப் பிடித்து
"அ" எழுதக் கற்றுத் தந்தது
என் அம்மா!
ஆனால் என்னையே விரலாய்ப் பிடித்து
வாழ்வதற்குக் கற்றுத் தந்தது நீ!

வரும் விருந்தினரிடம் எல்லாம்
நான் பரிசு வாங்கும்
பள்ளிப்பருவப் புகைப்படம் காட்டி
பெருமிதம் கொள்ளும்
வெள்ளை மனம் உன்னைத் தவிர
யாருக்கு உண்டு?

எல்லா ரெயில் நிலையங்களிலும்
எல்லா பேருந்து நிலையங்களிலும்
உலராமல் உறைந்திருக்கும்
தன் மகனை முதன் முதலாய்
கல்லூரிக்கு அனுப்பிய
தந்தைமாரின் கண்ணீர்த்துளிகள்!

எல்லாக் கோவில்களிலும்
எல்லாத் திருமணமண்டபங்களிலும்
ஈரம் சேர்த்திருக்கும்
தன் மகளின் திருமணப்பிரிவின்பின்
தந்தைமாரின் கண்ணீர்த்துளிகள்!

எனக்கு ஆயிரம் மாலைகள்
குவிந்தாலும்
அவை ஒன்றிலும்
உன் வியர்வையின் நறுமணம்தான்!

உன் கனவுகள்
தொடரும் வரைதான்
என் வெற்றிகள்
நிலைத்திருக்கும்!

No comments:

Post a Comment